Friday, May 24, 2013

நாடியா காமன்சி



ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சிறுவயதில் பதக்கம் பெற்று புகழடைந்தவர்களில் முதன்மையானவர் நாடியா காமன்சி அப்போது அவளின் உயரம் 4அடி 11இஞ்சுகள் எடை 86 பவுண்டுகள்.அப்போது அவளுக்கு தங்கபதக்கத்தை விட பரிசாக பெறப்போகும் பொம்மைகளே அவள் கண்ணுக்கு பெரிதாக தோன்றியது. உடல் உயரத்தை வேண்டுமானால் அப்போது அளந்திருக்கலாம் ஆனால் அவளின் புகழ் உயரத்தை அப்போது அவர்களால் அளவிடமுடியாமல் போனது!!.

நாடியா ருமேனியாவின் மலைசூழ் நகரமான ஆன்ஸ்டியில் நவம்பர்12, 1961-ல் பிறந்தார். பெற்றோரின் பெயர்ஜார்ஜ் மற்றும் ஸ்டெயினா அலெக்சாண்ட்ரா காமன்சி. இவரின் குடும்பம் சிறிய அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்ந்தது. சிறுவயது முதலே நாடியா துடிப்புமிக்க குழந்தையாக இருந்தார். ஓடுவதிலும் துள்ளிகுதிப்பதிலும் அதிக ஆனந்தம் கொண்டார். துள்ளிகுதித்து கட்டிலை உடைப்பதும், மெத்தையின் பஞ்சு மற்றும் சுருள்கம்பிகளை சேதப்படுத்துவதை முழுநேரத்தொழிலாக கொண்டிருந்தார்.

ஆன்ஸ்டி விளையாட்டு பள்ளியில் விளையாட்டு பயிற்சியாளர் பெலா கரோயி ஒருநாள் நாடியாவின் பள்ளிக்கு விஜயம் செய்திருந்தார். நாடியாவும் மற்றொரு பெண்ணும் பயிற்சி செய்வதை கண்டார். அவர்களிடம் பேச்சுகொடுக்கும்போது வகுப்பறை தொடங்கியதால் அவர் கண்முன்னே இருந்து  இருவரும் மறைந்தனர். அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க வகுப்பறை வகுப்பறையாக யார்யாருக்கெல்லாம் ஜிம்னாஸ்டிக்கில் சேரவிருப்பம் என கேட்டுக்கொண்டே வந்தார் பெல்லா. எதிர்பார்த்தமாதிரியே இருபெண்களும் கைகளை உயர்த்தி அவரிடம் வந்தனர். எதிர்பார்த்தவர்களை கண்டுகொண்டார். நாடியா பெல்லாவின் பயிற்சிபாசறைக்கு அழைக்கப்பட்டார். எந்த ஒரு குழந்தைக்கும் பயிற்சியளிக்கும் முன்னர் பெல்லா சில தேர்வுகளை வைப்பார் அதில் வெற்றி பெறும் குழந்தைகளை மட்டுமே பயிற்சிக்கு தெரிவு செய்வார். நாடியாவுக்கு நீளம்தாண்டுதல் 15மீட்டர்வேகஓட்டம், தூணின் மேல் நடக்கவிடுதல் போன்ற போட்டிகள் வைக்கப்பட்டன. 4 அடி உயரமுள்ள தூண் 4இன்ச் வரை அகலம் மட்டுமே அதை அனாவசியமாக கடந்து பெலாவின் நன்மதிப்பை பெற்றார்.6 வயதான நாடியா அன்று முதல்பெலாவின் பயிற்சிபட்டறைக்கு செல்லதயாரானார். வாரத்தில் 6நாட்கள் பயிற்சிநாள் ஒன்றுக்கு 4மணி நேரம்பயிற்சி. பயிற்சிநேரம் கூடியதே தவிர களைப்பு கூடவில்லை.

ஒரு வருடம் கழிந்தது நாடியா போட்டிகளுக்கு தயாரானார். தனது ஏழு வயதில் ருமேனியாவின் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். கலந்து கொண்ட சகபோட்டியாளர்களில் வயதுகுறைந்த பெண்ணான நாடியா 13வது இடத்தைபிடித்தார். நாடியாவிடம் சென்ற பெலா ஒரு சிறிய பொம்மையை பரிசாக கொடுத்து இனி மேல் நீ 13வது இடத்தை பிடிக்காகூடாது என்றார்.( நாடியா பொம்மைகளை சேர்த்து வைக்கும் ஆர்வத்தை தூண்டியவர் அவரே). பெலாவிடம் கொடுத்த வாக்கினை அடுத்த ஆண்டே நாடியா நிறைவேற்றினார். 8வயதில் ருமேனியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதலிடம் பெற்றார்.



1971-ம் ஆண்டு அவர் ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் அணியில் இடம்பெற்றார். பல்கேரியாவில் நடந்த நட்புரீதியான போட்டியில் ருமேனிய குழுவுடன் கலந்துக்கொண்டார். அவர் அதுவரை ருமேனிய வீரர்களை தவிர வேறு எவருடனும் போட்டியிட்டதில்லை ஆனால் இங்கு நிலைமை வேறு இருப்பினும் 2 தங்கபதக்கங்களை பெற்றார் கூடவே பல்கேரிய பொம்மைகளையும்………

அடுத்த ஆண்டு 1972ல் தேசியபோட்டிகளில் 3வது முறையாக சாம்பியன் பட்டம், நட்பு ரீதியான போட்டிகளில் 3தங்கம்,ஐரோப்பிய சாம்பியன் பட்டம் என சாதனைகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

அடுத்த பெரியதளம் என்ன!!?? ஒலிம்பிக்தான் அந்த வாய்ப்பும் 1976ம் ஆண்டு நாடியாவுக்கு கிட்டியது. கனடாவின் மாண்ட்ரேலில் நடைபெற்ற போட்டிக்கு தயாரானார் .போட்டி நாளும் வந்தது முதல் சுற்றே நாடியாவுக்கு மிகவும் பிடித்தமான சமமற்ற கம்பிகள் மீது நடைபெறும் (Uneven Parallel Bars) போட்டி ஆரம்பமானது. நாடியா விளையாடிய விதம் போட்டி நடுவர்களின் வாயை பிளக்க வைத்தது .அறிவிப்பாளர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு கடலில் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும் என்பதை பொய்யாக்கி ஒரு சிறுமி அந்தரத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறாள் என்று புகழ்ந்துரைத்தார் .மதிப்பெண் அறிவிக்கும் தருணம் அரங்கமே அமைதியானது .மதிப்பெண் பலகையில் 10 என்று முழு மதிப்பெண் ஒளிர அரங்கமே சற்று குழப்பமுற்றது. சில பேர் பலகையில் ஏதேனும் கோளாரோ என தலையை சொறிந்தனர் . சிறிது நேரம் கழித்து அந்த பெண் வரலாற்றிலேயே முதன் முறையாக முழு மதிப்பெண் பெற்றுள்ளாள் என்பதை அறிவித்தவுடன் அரங்கமே ஆர்பரப்பில் அதிர்ந்தது. ஏழு முறைகள் இதே போல முழு மதிப்பெண்களை பெற்றாள். போட்டிகள் முடிந்து நாடியா வீட்டிற்க்கு செல்லும் போது அவள் கையில் இருந்தது 3 தங்கபதக்கம் ஒரு வெள்ளி ஒரு வெண்கலப்பதக்கம் மற்றும் 200 பொம்மைகள்……

1976ல் ருமேனியாவின் மிகச்சிறந்த விருதான தொழில் முறை சமுகவீராங்கனை விருது வழங்கப்பட்டது அவ்விருதை பெற்ற மிகக்குறைவான வயது பெண்ணும் இவர்தான்.1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் 2 வெள்ளி பதக்கங்களைப்பெற்றார்.1984ல் ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.1994ல் தனது ஊதியத்திலிருந்து 120.000 அமெரிக்க டாலர்களை ருமேனிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணிக்காக நன்கொடை வழங்கினார்.1996ல் பார்ட்கார்னர்ஸ் என்னும் ஒலிம்பிக் சாதனையாளரை மணந்தார்.இப்போது அவர் ஒக்லகாமாவில் ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி பள்ளியை நிறுவி வசித்துவருகிறார்.



நாடியாவின் பயிற்சியாளர் பெலா இவரைப்பற்றி கூறும் போது அவள் மூன்று திறன்களை கொண்டிருந்தாள்

முதலாவதாக உடற்க்கூறுகளானதிறன், வேகம் மற்றும் உறுதி

இரண்டாவதாக மனக்கூறுகளானநுண்ணறிவு, வலிமை மற்றும் கவனம்

மூன்றாவதாக மேற்க்கூறிய அனைத்து திறனும் அடங்கிய வீரம் அவளிடம் அதிகம் இருந்தது.

                       ###################


நாடியா முழுமதிப்பெண் பெற்ற போட்டியின் காணொளி:






Thursday, February 21, 2013

கருப்பு கங்காரு


எந்த விஷயத்தில் இறங்கும் போதும் அதைப்பற்றி சற்றேனும் அறிதல் வேண்டும் –
மைக்கேல் ஜோர்டான்.



கூடைபந்தாட்ட விளையாட்டில் கொண்டாடப்படும் வீரர்களில் முதன்மையானவர் என்று மைக்கேல் ஜோர்டானை கூறினால் அது மிகையாகாது. உலகமுழுதும் உள்ள கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் அருமையான விளையாட்டு வீரர்.
கூடைபந்தாட்ட விளையாட்டின் வரலாற்றில் 1980 முதல் 1990 வரையிலான காலம் ஜோர்டான் காலம் என்று அழைக்கப்படுகிறது.

கிரேக்க சின்னமான ஒமெகா என்னும் சின்னத்தை தனது மார்பில் வரைந்திருப்பார். அது அவரின் ராசியான சின்னமாக கருதப்பட்டது.

ஜோர்டானுக்கு பிறந்த குழந்தைகள் மூவரும் டிசம்பரில் பிறந்தவர்கள்.
ஜோர்டான் 150 வகையான விளையாட்டு உடைகளையும் அதற்கு தகுந்தாற்ப்போல காலணிகளையும் தயார் நிலையில் வைத்திருப்பார்.

ஆட்டத்திற்க்கு முன்பு 4மணி நேரம் வாயையும் வயிறையும் கட்டி வைத்திருப்பார்.
ஆட்டத்திற்க்கு முன்னர் தன் அறையை வெப்பதன்மை கொண்ட அறையாக பராமரிப்பார்.வெப்பதன்மை வேக அளவையும் நோய் எதிர்ப்பு தன்மையையும் உண்டாக்கும் என்று மிகவும் நம்பினார்.

இவரை தவிர இவரது குடும்பத்தில் யாரும் 6 அடி உயரத்துக்கு மேல் இல்லை.


ஜோர்டான் 5 வகுப்பு படிக்கும் போது சகமாணவி அஞ்செலா வெஸ்ட் என்னும் பெண்ணுக்காக பள்ளி பேருந்தில் தனக்கு அருகே இடம் பிடித்து தருவார்.ஆனால் அந்த பெண் ஒரு நாள் கூட மைக்கேல் அருகே உட்கார்ந்தது இல்லை.

ஒரு ஆட்டத்தில் சராசரியாக 30 புள்ளிகளை குவிப்பது மைக்கேலின் சிறப்பம்சமாகும்.

ஜெர்சி எனப்படும் விளையாட்டு உடையின் எண்23 இவரை அடைந்தது சுவையான சம்பவம்.பள்ளி விளையாட்டுகளின் போது இவரது அண்ணன் லாரி 45என்ற இவரது சட்டையை எடுத்துக்கொண்டார் மனமுடைந்த இவர் அதில் பாதியான் 22 எடுத்து அதன் முழுமை 23 தனது எண்ணாக தேர்ந்தேடுத்தார்.பல சாதனைகளின் போதும் 23 இவரை தொடர்ந்தது.23 எண் என்பது கூடைபந்து விளையாட்டின் கெளரவ எண்ணாக பார்க்கப்படுகிறது.

NBA என்னும் அமெரிக்காவின் தேசிய கூடைபந்து விளையாட்டு கழகத்தின் சார்பாக நடைபெறும் உலக புகழ் பெற்ற லீக் போட்டிகளில் இவர் சிகாகோ புல்ஸ்அணிக்காக விளையாடினார்.இது இவரின் புகழை உலக அளவில் கொண்டு போய் சேர்த்தது.

1984 லாஸ்ஏஞ்சல்ஸ் 1992 பார்ஸிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில அமெரிக்க அணி தங்கம் வென்றதில் இவரது பங்கு மகத்தானது.
1986-87ல் முதல் முறையாக 3000 புள்ளிகளை எட்டிய ஆட்டக்காரர் என்ற சிறப்பினைப்பெற்றார்.

NBA லீக் போட்டிகளில் சிகாகோபுல்ஸ் அணியை வழிநடத்தி ஆறு முறை வாகையர் பட்டம் சூட வைத்துள்ளார். NBA வினால் மதிப்பு மிக்க ஆட்டக்கார்ர் என்னும் விருதினை 5 முறை பெற்றுள்ளார்.

1996ஆம் ஆண்டு ஸ்பேஸ்ஜாம் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.அதில் கார்டூன்களோடு சேர்ந்து விளையாடும் படி அமைந்திருந்ததால் குழந்தைகளிடம் மிகவும் பிரபலமடைந்தார்.



மைக்கேல் ஜோர்டானின் பொன்மொழிகள் கீழ்கண்ட இணைப்பில்!


மைக்கேல் ஜோர்டானின் விளையாட்டு காணொளிகள் கீழ்கண்ட இணைப்பில்! 

சாகசங்கள்


(The Best Michael Jordan Tribute)







I can accept failure, everyone fails at something.But I can’t accept not trying – Michael Jordan


Friday, January 25, 2013

காத்தரின் சுவிட்சர்



மரத்தான் என்னும் நீண்ட ஓட்டபந்தையத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் காத்தரின் சுவிட்சருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். சுவிட்சர் தனது 12 வயதில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் சீயர்லீடர் என்ற துறைக்கு செல்ல பெரிதும் விரும்பினார்.விளையாட்டு வீராங்கனையாக மாறினால் நீ பெற விரும்பும் அனைத்தையும் பெறமுடியும் என்ற தனது தந்தையின் கருத்தை உள்வாங்கி 1959ல் பள்ளி ஹாக்கி அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.பயிற்சியை தவிர்த்து தினமும் 1மைல் தூரம் ஓடினார்.அது அவரின் மனதிடத்தை அதிகப்படுத்தியது மேலும் படிப்படியாக ஓட்டம் அவரது ரகசிய ஆயுதமாகவும் மாறியது.உயர்நிலை பள்ளியில் படித்தபோது நாளொன்றுக்கு 3மைல் தூரத்தை தினமும் எளிதாக ஓடினார். அன்றைய காலத்தில் பெண்கள் இவ்வளவு தூரம் ஓடுவார்களா என்பது கேள்விக்குறியே!!
வெர்ஜினியா பல்கலைகழகத்தில் ஹாக்கியோடு ஓட்ட்த்தையும் தொடர்ந்தார்.ஒருநாள் ஆண்களின் ஓட்டப்பந்தைய பயிற்சியாளர் இவரை அணுகி மாகாண அளவில் நடைபெறபோகும் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள தன்னுடைய குழுவில் ஓட விருப்பமா என்று கேட்டார்.தன்னுடைய ஓட்ட திறமையை உலகுக்கு காட்ட வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த காத்தரின் உடனே சம்மதித்தார்.(ஆண்களோடு பெண்கள் போட்டியிடாத காலம் அது).
போட்டி தினத்தின் போது இவரே எதிர்பாரா வண்ணம் மீடியாவின் பார்வை முழுவதும் இவர் மீது விழுந்திருந்தது. காமிராக்களின் மின்னல் மழையில் சற்று மிரண்டே விட்டார் என்று கூட சொல்லலாம்.காரணம் காத்தரின் ஓடப்போவது ஆண்களுடன் அவர்களோடு போட்டியிட்ட அவர் போட்டி தூரமான 1மைல் தொலைவை 5.58 வினாடிகளில் கடந்தார்.நாடே தன்னை போற்றும் என்று எண்ணியவருக்கு கிடைத்த்து ஏமாற்றம் தான் பரிசாக வந்தது கொலை மிரட்டல்களும் சாபங்களும் தான்.

விளையாட்டு உலகில் இருந்து சிலகாலம் ஒதுங்கியே இருந்த காத்தரின், ஸ்செராக்கியுசில் பத்திரிக்கையாளராக பணியில் சேர்ந்தார்.ஆனாலும் நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் போட்டியில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை அவர் தன்னுள்ளேயே கொண்டிருந்தார்.அங்கு நீண்ட ஓட்டம் ஓடும் ஆண்களின் பயிற்சியாளர் ஆர்னியுடன் தன்னை குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டார்.இவர்கள் ஓடி பயிற்சி எடுப்பதே நீண்ட ஓட்டமான மாரத்தானில் கலந்து கொள்வதற்க்காக நீ வேண்டுமானால் இங்கு பயிற்சி எடுத்துக்கொள் ஆனால் போட்டியிட முடியாது என திட்டவட்டமாக அறிவித்தார்.ஆனால் சுவிட்சரின் மனதில் வேறு ஒரு திட்டம் இருந்தது எப்படியும் மாரத்தானில் கலந்து கொள்ள வேண்டும் என்று!!
மாரத்தான் ஓட்டம் என்பது சராசரியாக 26.2மைல் தொலைவு வரை ஓட வேண்டும்.காத்தரின் அப்போது 10மைல்கள் வரை ஓடும் திறம் பெற்றிருந்தார். 1966ல் பாபி ரொபெர்டோ என்ற பெண் ஓட்ட எண் இல்லாமல் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார் அது அங்கீகாரம் இல்லாமல் போனது அது போல இல்லாமல் அங்கீகாரம் பெற்று ஓட வேண்டும் என் எண்ணி தனது பயிற்சியின் தூரத்தை 15,17.18 உயர்த்தி நாளொன்றுக்கு 26மைல்கள் ஓடுமளவு முன்னேறினார்.கடும் குழப்பத்திற்கு பிறகு இவரின் ஓட்ட திறமையை கண்ட பயிற்சியாளர் ஆர்னி போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் வழங்கினார்.நான் சம்மத்தித்தாலும் தேசிய அத்லெட்டிக் கவுன்சில் (NCAA) உன்னை நிராகரிக்கும் பின்விளைவுகளை நீயே பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.போட்டியை தவிர எதுவும் சுவிட்சரின் காதுக்கு ஏறவில்லை.
சுவிட்சர் போட்டிக்காக விண்ணப்பித்தார் அவரின் விண்ணப்ப படிவம் வந்தது.சரியான எண் பெறாமல் ஓடியதற்க்காக பாபி நிராகரிக்கப்பட்டது போல தானும் நிராகரிக்கப்படக்கூடாது என்று விதிமுறைகளை படித்தார். மரத்தான் ஓட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக விதிமுறைகள் ஏதும் காணப்படவில்லை.விண்ணப்பபடிவத்தில் தனது பெயரை K.V.சுவிட்சர் என்று நிரப்பினார்.

1967ம் ஆண்டுக்கான பாஸ்டன் மாரத்தான் போட்டி தொடங்கியது.பனிப்பொழிவுடன் பலத்தகாற்று அவர்களை வரவேற்த்தது.கடினாமான துணிகளினால் அனைவரும் தன்னை மறைத்திருந்தனர் அது சுவிட்சருக்கு சாதகமாய் போனது அவர் ஆண்களோடு ஆணாக கலந்திருந்தார்.அவளை இனம் கண்ட ஆண் போட்டியாளர்களின் மனநிலை அவரை ஆதரிக்கும் வண்ணமே இருந்த்தது. ஒட்டம் ஆரம்பித்தது 4 மைல்களை சுவிட்சர் கடந்த போது பத்திரிக்கையாளர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டனர்.ஆண்களோடு ஒரு பெண் ஓடுகிறாள் என கூக்குரலிட்டனர். பின் தொடர்ந்த உதவி வாகனத்தில் இவரை சத்தம் போட்டு நிறுத்த சொன்னனர். மேலும் தொடர்ந்து ஓடினால் கொன்றுவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.இனியும் தான் பெண் என்பதை சுவிட்சர் மறைக்க விரும்ப வில்லை தனது முக்காடை திறந்து காற்றில் கூந்தலை பறக்க விட்டார்.பேருந்தில் இருந்து குதித்த ஜோக் என்னும் நபர் சுவிட்சரை தன் பலம் கொண்டு தடுத்தான்.

அவரின் கூடவே ஓடிவந்த பயிற்சியாளர் ஆர்னி மற்றும் காதலர் டாமும், ஜோக்கை சுவிட்சரிடமிருந்து பிரித்தனர். அவனை வெறித்த சுவிட்சர் அங்கேயே அவனை கொன்று விடலாமா என்று எண்ணினார் அவரை பார்த்த பயிற்சியாளர் வேகமாக ஓடு பேய் போல ஓடு என கட்டளையிட்டார்.சுவிட்சர் தனது ஓட்ட தூரத்தை 4:20:00 என்ற மணிக்கணக்கில் முடித்தார்.இதுவும் தேசிய அத்லெட்டிக் கவுன்சிலால் அங்கீகரிகப்படவில்லை ஆனால் இம்முறை பத்திரிக்கை துறையினர் இவரை உலகறிய வைத்துவிட்டனர்.
காத்தரின் சுவிட்சர் ஏற்படுத்திய தாக்கம் பெண்களை மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளுமாறு வைத்தது.ஆண்களை போல பெண்களாலும் நீண்ட தூரம் ஓட முடியும் என்று 1972ம் ஆண்டு மாரத்தான் போட்டியில் பெண்களும் கலந்து கொள்ளலாம் என விதிகள் தளர்த்தப்பட்டன.சர்ச்சையில் ஆரம்பித்து இன்று சாதனை நிகழ்த்திக்கொண்டுள்ளனர் அவரை பின் தொடர்ந்த பெண்கள்!!.
.
நடந்த நிகழ்வை காத்தரின் கீழ்காணும் காணொளியில் விவரிக்கிறார்.



I would have finished that race on my hands to prove that a women could do it. – Kathrine Switzer.



எட்டு மறிவினில்(திறனிலும்) ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! - பாரதியார்..

Saturday, January 19, 2013

பிளேடு மனிதர்(கள்)



பாரா ஒலிம்பிக் போட்டிகள் என்பன ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற பின்னர் அதை தொடர்ந்து நடைபெறும் மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளாகும்.சில வரைமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நட்த்தப்படுகின்றன. ஐபிசி என்று வழங்கப்படும் சர்வதேச பாரா ஒலிம்பிக் குழுமம் உடல் குறைபாட்டு அளவை T என்று F பிரிக்கின்றனர் T என்பது TRACK EVENTS அதாவது ஒட்டப்பந்தையம் சார்பான விளையாட்டுக்கள்என்பது FIELD EVENTS மைதான விளையாட்டுக்கள் T1,T12 T32 ,T44 ,F12 ,F22 ,F31, F44 இதில் காணப்படும் எண்கள் அவர்களின் உடல் தகுதி அளவீடுகளாகும். அவர்களின் உடலில் இருக்கும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு வீரர்கள் பிரிக்கப்படுகின்றனர்

லண்டன் 2012ல் பாரா ஓலிம்பிக்கில் T44 பிரிவில் நடைபெற்ற சர்ச்சைகுரிய சம்பவங்களில் ஒன்று தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் என்னும் பிளேடு ரன்னர் என்பவர் வைத்ததுதான்.

முதலில் இவரை பற்றியும் பார்ப்போம் இவருக்கென தனி வரலாறு உள்ளது.2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தன் முதல் தங்க பதக்கத்தை பெற்றார்.
இவரின் ஓட்ட திறமையை எழுத்தில் காண்பதை விட கிழேயுள்ள காணொளியில் காணலாம் ஒரு பந்தைய குதிரையை எவ்வளவு எளிதாக வெல்கிறார் என்பதை!!



2007ஆம் ஆண்டு இவருக்கு எதிராக செயற்கை கால்களை விதிகளுக்கு மீறி தான் வெற்றி பெறும் வண்ணம் தயாரிக்கிறார் என்ற புகார் எழுந்த்து இதனால் சர்வதேச தடகள சம்மேளனம் இவரை போட்டிகளில் பங்கேற்க தடை செய்தது.இதனால் 2008 ஒலிம்பிக்கில் இவர் கலந்து கொள்ளவில்லை.
தளாராத பிஸ்டோரியஸ் 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை தயார் செய்தார் அதில் தன் பிரிவு T44ல் பலத்த போட்டி இருக்கும் என கனவிலும் நம்பியிருக்கமாட்டார்

இப்போது அவரது பிரிவின் சக போட்டியாளரான ஆலன் ஆலிவேராவை பற்றி பார்ப்போம்!!. பிரேசிலில் பிறந்த இவர் பிறந்த 21ம் நாளிலே தன் இரண்டு கால்களையும் இழந்தவர். ஏழ்மை நிலையிலேயே பயிற்சியை தொடர்ந்த இவர் தன் 13ம் வயதிலேயே பிரேசில் அணிக்காக போட்டிகளில் கலந்து கொண்டார்.2008ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றிருந்தார்.


இந்த இருவரும் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில நடை பெற்ற உலக தடகள போட்டிகளில் கலந்து கொண்டாலும் சரியான இணக்கம் காணப்பட வில்லை.

2012 லண்டன் பாரா ஒலிம்பிக்கின் போது T44பிரிவின் 200மீட்டர் இறுதி போட்டியில் இருவரும் மீண்டும் மோதிக்கொள்ளும் நிலை வந்தது. இதில 26 வயதான பிஸ்டோரியஸ் மிகவும் அனுபவும் திறமையும் மிக்கவர் இறுதி சுற்றுக்கு தகுதிபெறும் முன் சுற்றில் இவர் 21.30வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்து இருந்தார்.பிஸ்டோரியஸ் ரசிகர்களால் கால்களில்லாத உலகத்தின் வேக மனிதன் என்றும் பிளேடு ரன்னர் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். 19வயது  ஆலனுக்கு அது கடுமையான போட்டிதான் பக்கத்தில் இருப்பவர் உலக சாதனைக்கு வேறு சொந்தக்காரர் போட்டிக்கான களத்தில் வீரர்கள் இறங்கினர்.விசில அடிக்கப்பட்டது சில வினாடிகளில் பிஸ்டோரியஸ்சை பின்னுக்கு தள்ளினார் ஆலன் 21.45 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்தார். பிஸ்டோரியஸ் 21.53 வினாடிகளில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.

விரக்தியின் விளிம்புக்கு போன பிஸ்டோரியஸ் ஆலிவர் மீதும் அவர் பயன் படுத்திய பிளேடின் மீதும் குறை கூறினார்.அது விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ளது சற்று உயரமாக உள்ளதால் காலின் வேக அளவும் எடுத்து வைக்கும் தூரமும் என்னை தோற்கடித்துவிட்டது என்று குறை கூறினார்.(பின்னர் தன் புகாரினை மன்னிப்புடன் திரும்ப பெற்றார்)அவர் காரணங்களை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த ஆலனின் தாயார் கிளாடியா அவன் முதன் முறையாக செயற்கை காலை அணிந்த போது மிகவும் சிரமப்பட்டான் மிகவும் சிரமத்திற்கிடையே சொந்த செலவில் ஓட்டபந்தைய பிளேடுகளை வாங்கினோம் பின்னர் சுகாதார துறையின் முலமாக வேறு காலணிகள் வழங்கப்பட்ட போதும் அதை பழக மிகவும் சிரமப்பட்டான்.அதை வார்த்தைகளால் சொல்லலாகாது. ஒவ்வொரு முறையும் அவன் என்னிடம் அம்மா பழைய வலிகளை மறப்போம் புதிய வழிகளை செயல் படுத்துவோம் என் ஆறுதல் கூறுவான்.எட்டு வயது முதல் அவன் எடுத்துக்கொண்ட பயிற்சியின் பலனை அவன் இன்று அடைந்துள்ளான். இந்த வெற்றி அவன் எதிர்பார்க்காத ஒன்றாகும் எனெனில் சிறந்த வீரர் ஆஸ்கரை வெற்றி கொள்வது ஒன்றும் எளிதானது இல்லை. என்னால் இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறினார்.

T44 பிரிவின் 400 மீட்டர் பிரிவில் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.

எனினும் 200மீட்டர் பிரிவில் தான் தோல்வியுற்றதை அவரால் ஏற்க முடியாத காரணத்தினால் பொய் புகார்களை வளரும் வீரர் மேல் சொன்னார்.பின்பு உண்மை நிலையை உணர்ந்த அவர் ஆலனிடமும் சர்வதேச தடகள சம்மேளத்திடமும் மன்னிப்பு கேட்டார்.

விளையாட்டின் இறுதி நிலை என்பது விட்டுக்கொடுத்தல் மற்றும் சகிப்பு தன்மையாகும்.உடனடியாக பிஸ்டோரியஸ் மன்னிப்பு கேட்டது அந்த வளரும் விளையாட்டு வீரரான ஆலனின் மதிப்பை கெடுக்காமல் தன் மதிப்பை விளையாட்டு உலகத்தினர் மற்றும் ரசிகர்களிடையே மங்காமல் செய்து விட்டார்.





I found myself smiling on the starting blocks which is very rare – Oscar Pistorius
  





Thursday, January 10, 2013

ஃபார்மூலா ஓன் சில தகவல்கள்


F1 எனப்படும் பார்முலா ஓன் என்னும் கார்பந்தைய
போட்டி உலகின் அதிவேக கார்பந்தைய போட்டி.
கீழ்கண்ட காணொளி சாதாரண வாகனத்திற்க்கும் 
எஃப் ஓன் காருக்கும் உண்டான வேகத்தை 
வித்தியாசப்படுத்துகிறது.


இது கிரான் ப்ரீ(பிரெஞ்சு மொழியில் சிறந்த பரிசு) என்று 
வழங்கப்படுகிறது. போட்டி தனிநபர்களிடம் காணப்படும் 
ஆனால் அவர்கள் தனிநபர்கள் இல்லை ஓட்டுனர்கள்,
வடிவமைப்பாளர் வழிநடத்துனர்,தொழில்நுட்பப்பிரிவு
என்று குழுவாக இயங்குகின்றனர்.  கீழ்கண்ட காணொளியில்
எவ்வளவு துரிதமாக டயர் மாற்றப்பட்டு எரிபொருள்
நிரப்பப்பட்டு காற்று சரிபார்க்கப்படுகிறது என்பதை பாருங்கள்!!


கார்பந்தைய தூரம் 300கிமியை சுற்றி காணப்படும்.பந்தைய
பாதைகளை பொறுத்து வழிதட சுற்றுக்கள் கணக்கிடப்படும்
நேர அளவு 2மணி நேரம் வரை வழங்கப்படும்.
முதல் முதலாக இப்போட்டிகள் 1920 முதல் 1930
வரை ஐரோப்பிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள்
என்ற பெயரிலேயே நடத்தப்பட்டன.

பார்முலா என்பது கணக்கில் சில வழிமுறைகளை பின்பற்றி
விடையை தேடுவது இங்கும் சில அடிப்படை
முறைகளை பின் பற்றி நடத்தப்படுவதால் 
பார்முலா1 கார்பந்தையம் என்று வழங்கப்படுகிறது.


எஃப்1 காரின் எடை 550கி.கிராம். காரின் மேல்பக்கம்
கார்பன்,இரும்பு,பைபர் போன்றவைகளை
கலவையாகக் கொண்டு அமைக்கப்பெற்றதாகும்.பந்தைய
கார்கள் மணிக்கு 350கிமி வரை 
செலுத்தப்படுகிறது.(சென்னையிலிருந்து திருச்சிக்கு
1மணி நேரத்தில் சென்றடையலாம்) சிறிய வகை 
விமானங்கள் டேக் ஆஃப் எனும் மேலே செல்வதற்கு
ஊர்ந்து செல்லும் வேகத்தை விட காரின் வேகம்
அதிகமாக இருக்கும். எஃப்1 கார்கள் தனது வேகத்தை
0விலிருந்து 160கி.மிக்கு கொண்டுவரவும் மீண்டும்
0விற்க்கு கொண்டு செல்ல 4 வினாடிகள் போதும்.
உலகம் முழுவதும் பரவலான அளவு ரேஸ் 
ரசிகர்கள் உள்ளனர். சுமாராக தொலைக்காட்சி 
வழியாக 500 மில்லியன் அளவு ரசிகர்கள் 
கண்டுகளிக்கின்றனர்.

எஃப்1 ஓட்டுனர்கள் ஒவ்வொரு முறை 
வாகனத்தில் நுழையும் போதும் வெளியேறும் 
போதும் தன் காரின் (ஸ்டியரிங்) இயக்கும் 
வட்டவடிவான கைப்பிடியை அகற்றி பின்னர் 
பொருத்த வேண்டும்.

எஃப்1 காரின் பிரேக் டிஸ்குகள் 100டிகிரி சென்சியஸ்
அளவு வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்ட
கார்பன் இழைகளால் அமைக்கப்பெற்றதாகும்.
இது இரும்பின் உருகுநிலையை விட அதிக சக்தி
தன்மை கொண்டதாகும்.

எஃப்1 கார் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடிக்கும்
போது “சாதாரண கார் டிரைவர் ஒரு சுவற்றின் 
மேல் 300கிமி வேகத்தில் காரை இடித்தார் 
எனில் அவர் என்ன அனுபவம் பெறுகிறாரோ 
அந்த அனுபவத்தை பெறுவார்”.

எஃப்1 காரின் எஞ்சினின் பிஸ்டன் 
வினாடிக்கு 18,000 முறை செயலாற்றுகிறது.
சாதாரண கார் 6000 முறை மட்டுமே 
செயலாற்றும்.இது மூன்று மடங்கு அதிகமாகும்.
போட்டியில் கலந்து கொள்ளும் காரின் எஞ்சின்
2 மணி நேரத்தில் தன் வாழ்நாளை 
முடித்துக்கொள்கிறது.இவ்வகை
எஞ்சின்களை சாதாரண கார்களில் 
பயன்படுத்தினால் அவை 20 ஆண்டு 
காலம் வரை விசுவாசமாக வேலையாற்றும்.


எஃப்1 காரில் 80,000 உதிரிபாகங்கள் உள்ளன.
பாகங்களை இணைக்கும் போது 99.9%வரை சரியாக
இணைத்தாலும் அந்த காரை போட்டிக்கு
கொண்டு சென்றாலும் காரோடு இணைக்கபட்ட
கணிப்பொறி 80% இணைப்பு பாகங்கள் 
தவறாக இணைக்கப்பட்டதாகவே காட்டும்.
100 சென்சார்கள் காரையும் மானிட்டரையும்
இணைகின்றன.அவற்றை இணைக்கும் 
ஒயர்களை அளவிட்டால் சுமார் ஒரு கிலோமீட்டர்
வரை இருக்கும்.

டயர்களுக்கு நைட்ரசன் வாயு நிரப்பப்படுகிறது
ஏனெனில் மற்ற வாயுக்களை விட இது
அதிக நெகிழ்வு தன்மை கொண்டதாகும்.சராசரி 
கார்களின் டயர்கள் 60,000 முதல் 1,00,000கிமி
வரை பயணம் செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எஃப்1 கார்களின் டயர்களின் வாழ்நாள்
90கிமியிலிருந்து 120கிமி வரைதான்.போட்டியின்
போது அரைகிலோ அளவு டயரின் அளவு குறைகிறது.
கார்களின் டயர்களின் சுழற்சிவீதம் வினாடிக்கு 50
முறைக்கு மேல் இருக்கும். இந்த வரியை படிக்க
கட்டாயம் குறைந்தது 5 வினாடிகளாவது ஆகும்
ஆனால் எஃப்1 போட்டியின் போது மூன்றே 
வினாடிகளில் டயர் மாற்றப்படுகிறது.


எஃப்1 கார் பந்தையத்தின் போது வினாடிக்கு 
12 லிட்டர் எரிபொருளை எரிக்கிறது.மீண்டும் 
எரிபொருளை நிரப்ப அமெரிக்க ராணுவ 
ஹெலிகாப்டர்களில் எரிபொருளை நிரப்பும் முறையை
பின்பற்றுகின்றனர்.

ஒவ்வொரு போட்டி முடிவுறும் போதும் ஓட்டுனர்கள்
தனது எடையில் சுமார் 5 கிலோ வரை இழந்திருப்பர்.
அவர்களின் இரத்த அழுத்த அளவும் சாதாரண 
அளவை விட ஐந்து மடங்கு கூடியிருக்கும்.

டையர்கள் உராய்வின் போது உண்டாகும் வெப்பத்தின்
அளவு 900-1200டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும்.
(சாதாரண நீர் கொதிப்படைய 100டிகிரி செல்ஸியஸ் போதும்)

போட்டியாளர்கள் பயன்படுத்தும் தலைகவசம் மிகவும்
கடினமான ஒன்றாகும் யாதெனில் 800டிகிரி செல்ஸியஸ்
வரையான நெருப்பில் சுடப்பட்டு 45 நிமிடங்கள் 
வரை நெருப்பை தாங்குமா என்று 
கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
300கிமி வேகத்தில் சென்று மோதினாலும் 
தலைகவசத்தின் முன்கண்ணாடி உடையாதவாறு
அமைக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது 
2.5மில்லிமீட்டர் தூரம் வரை கூட ஏதேனும்
பொருள் துளைத்திருந்தாலும் அத்தலைகவசம்
நிராகரிக்கப்படும்.


போட்டி ஓட்டப்பாதை ஈரமாக இருப்பின் டயர்கள்
250லிட்டர் வரை நீரை உறிஞ்சுகின்றன.
(ஒரு நபர் ஒரு நாளில் பயன்படுத்த இந்த நீர் போதுமே!!)
இத்தாலியில் உள்ள மோன்சா என்னும் ஓடுபாதை
உலகிலேயே மிகவும் கடினமான ஓடுபாதையாகும்.
இங்கு பிரேக் பிடிக்கும் போது இரண்டே நொடிகளில்
200கிமீயிலிருந்து 60கிமீக்கு குறையும்.

பந்தயம் முடிந்து நிற்க்கும் காரின் டயரின் மீது 
முட்டையை உடைத்து ஊற்றினால் உடனடி 
ஆம்லெட் ரெடி.அப்போது டயரின் வெப்ப நிலை
120டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும்.

எஃப் ஓன் காரை இயக்குவது பற்றிய எளிய காணொளி


மிக சிறந்த 10 சிறந்த கார்பந்தைய வீரர்கள்!!

என்ன கார் ஓட்ட ரெடியாயிட்டிங்களா சரி 
எம்ஜிஎம்முக்கோ கிஷ்கிந்தாக்கோ கிளம்புங்க 
நம்மளால முடிஞ்சது அதுதான்!!!

.

.