Friday, May 24, 2013

நாடியா காமன்சி



ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சிறுவயதில் பதக்கம் பெற்று புகழடைந்தவர்களில் முதன்மையானவர் நாடியா காமன்சி அப்போது அவளின் உயரம் 4அடி 11இஞ்சுகள் எடை 86 பவுண்டுகள்.அப்போது அவளுக்கு தங்கபதக்கத்தை விட பரிசாக பெறப்போகும் பொம்மைகளே அவள் கண்ணுக்கு பெரிதாக தோன்றியது. உடல் உயரத்தை வேண்டுமானால் அப்போது அளந்திருக்கலாம் ஆனால் அவளின் புகழ் உயரத்தை அப்போது அவர்களால் அளவிடமுடியாமல் போனது!!.

நாடியா ருமேனியாவின் மலைசூழ் நகரமான ஆன்ஸ்டியில் நவம்பர்12, 1961-ல் பிறந்தார். பெற்றோரின் பெயர்ஜார்ஜ் மற்றும் ஸ்டெயினா அலெக்சாண்ட்ரா காமன்சி. இவரின் குடும்பம் சிறிய அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்ந்தது. சிறுவயது முதலே நாடியா துடிப்புமிக்க குழந்தையாக இருந்தார். ஓடுவதிலும் துள்ளிகுதிப்பதிலும் அதிக ஆனந்தம் கொண்டார். துள்ளிகுதித்து கட்டிலை உடைப்பதும், மெத்தையின் பஞ்சு மற்றும் சுருள்கம்பிகளை சேதப்படுத்துவதை முழுநேரத்தொழிலாக கொண்டிருந்தார்.

ஆன்ஸ்டி விளையாட்டு பள்ளியில் விளையாட்டு பயிற்சியாளர் பெலா கரோயி ஒருநாள் நாடியாவின் பள்ளிக்கு விஜயம் செய்திருந்தார். நாடியாவும் மற்றொரு பெண்ணும் பயிற்சி செய்வதை கண்டார். அவர்களிடம் பேச்சுகொடுக்கும்போது வகுப்பறை தொடங்கியதால் அவர் கண்முன்னே இருந்து  இருவரும் மறைந்தனர். அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க வகுப்பறை வகுப்பறையாக யார்யாருக்கெல்லாம் ஜிம்னாஸ்டிக்கில் சேரவிருப்பம் என கேட்டுக்கொண்டே வந்தார் பெல்லா. எதிர்பார்த்தமாதிரியே இருபெண்களும் கைகளை உயர்த்தி அவரிடம் வந்தனர். எதிர்பார்த்தவர்களை கண்டுகொண்டார். நாடியா பெல்லாவின் பயிற்சிபாசறைக்கு அழைக்கப்பட்டார். எந்த ஒரு குழந்தைக்கும் பயிற்சியளிக்கும் முன்னர் பெல்லா சில தேர்வுகளை வைப்பார் அதில் வெற்றி பெறும் குழந்தைகளை மட்டுமே பயிற்சிக்கு தெரிவு செய்வார். நாடியாவுக்கு நீளம்தாண்டுதல் 15மீட்டர்வேகஓட்டம், தூணின் மேல் நடக்கவிடுதல் போன்ற போட்டிகள் வைக்கப்பட்டன. 4 அடி உயரமுள்ள தூண் 4இன்ச் வரை அகலம் மட்டுமே அதை அனாவசியமாக கடந்து பெலாவின் நன்மதிப்பை பெற்றார்.6 வயதான நாடியா அன்று முதல்பெலாவின் பயிற்சிபட்டறைக்கு செல்லதயாரானார். வாரத்தில் 6நாட்கள் பயிற்சிநாள் ஒன்றுக்கு 4மணி நேரம்பயிற்சி. பயிற்சிநேரம் கூடியதே தவிர களைப்பு கூடவில்லை.

ஒரு வருடம் கழிந்தது நாடியா போட்டிகளுக்கு தயாரானார். தனது ஏழு வயதில் ருமேனியாவின் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். கலந்து கொண்ட சகபோட்டியாளர்களில் வயதுகுறைந்த பெண்ணான நாடியா 13வது இடத்தைபிடித்தார். நாடியாவிடம் சென்ற பெலா ஒரு சிறிய பொம்மையை பரிசாக கொடுத்து இனி மேல் நீ 13வது இடத்தை பிடிக்காகூடாது என்றார்.( நாடியா பொம்மைகளை சேர்த்து வைக்கும் ஆர்வத்தை தூண்டியவர் அவரே). பெலாவிடம் கொடுத்த வாக்கினை அடுத்த ஆண்டே நாடியா நிறைவேற்றினார். 8வயதில் ருமேனியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதலிடம் பெற்றார்.



1971-ம் ஆண்டு அவர் ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் அணியில் இடம்பெற்றார். பல்கேரியாவில் நடந்த நட்புரீதியான போட்டியில் ருமேனிய குழுவுடன் கலந்துக்கொண்டார். அவர் அதுவரை ருமேனிய வீரர்களை தவிர வேறு எவருடனும் போட்டியிட்டதில்லை ஆனால் இங்கு நிலைமை வேறு இருப்பினும் 2 தங்கபதக்கங்களை பெற்றார் கூடவே பல்கேரிய பொம்மைகளையும்………

அடுத்த ஆண்டு 1972ல் தேசியபோட்டிகளில் 3வது முறையாக சாம்பியன் பட்டம், நட்பு ரீதியான போட்டிகளில் 3தங்கம்,ஐரோப்பிய சாம்பியன் பட்டம் என சாதனைகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

அடுத்த பெரியதளம் என்ன!!?? ஒலிம்பிக்தான் அந்த வாய்ப்பும் 1976ம் ஆண்டு நாடியாவுக்கு கிட்டியது. கனடாவின் மாண்ட்ரேலில் நடைபெற்ற போட்டிக்கு தயாரானார் .போட்டி நாளும் வந்தது முதல் சுற்றே நாடியாவுக்கு மிகவும் பிடித்தமான சமமற்ற கம்பிகள் மீது நடைபெறும் (Uneven Parallel Bars) போட்டி ஆரம்பமானது. நாடியா விளையாடிய விதம் போட்டி நடுவர்களின் வாயை பிளக்க வைத்தது .அறிவிப்பாளர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு கடலில் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும் என்பதை பொய்யாக்கி ஒரு சிறுமி அந்தரத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறாள் என்று புகழ்ந்துரைத்தார் .மதிப்பெண் அறிவிக்கும் தருணம் அரங்கமே அமைதியானது .மதிப்பெண் பலகையில் 10 என்று முழு மதிப்பெண் ஒளிர அரங்கமே சற்று குழப்பமுற்றது. சில பேர் பலகையில் ஏதேனும் கோளாரோ என தலையை சொறிந்தனர் . சிறிது நேரம் கழித்து அந்த பெண் வரலாற்றிலேயே முதன் முறையாக முழு மதிப்பெண் பெற்றுள்ளாள் என்பதை அறிவித்தவுடன் அரங்கமே ஆர்பரப்பில் அதிர்ந்தது. ஏழு முறைகள் இதே போல முழு மதிப்பெண்களை பெற்றாள். போட்டிகள் முடிந்து நாடியா வீட்டிற்க்கு செல்லும் போது அவள் கையில் இருந்தது 3 தங்கபதக்கம் ஒரு வெள்ளி ஒரு வெண்கலப்பதக்கம் மற்றும் 200 பொம்மைகள்……

1976ல் ருமேனியாவின் மிகச்சிறந்த விருதான தொழில் முறை சமுகவீராங்கனை விருது வழங்கப்பட்டது அவ்விருதை பெற்ற மிகக்குறைவான வயது பெண்ணும் இவர்தான்.1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் 2 வெள்ளி பதக்கங்களைப்பெற்றார்.1984ல் ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.1994ல் தனது ஊதியத்திலிருந்து 120.000 அமெரிக்க டாலர்களை ருமேனிய ஜிம்னாஸ்டிக்ஸ் அணிக்காக நன்கொடை வழங்கினார்.1996ல் பார்ட்கார்னர்ஸ் என்னும் ஒலிம்பிக் சாதனையாளரை மணந்தார்.இப்போது அவர் ஒக்லகாமாவில் ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி பள்ளியை நிறுவி வசித்துவருகிறார்.



நாடியாவின் பயிற்சியாளர் பெலா இவரைப்பற்றி கூறும் போது அவள் மூன்று திறன்களை கொண்டிருந்தாள்

முதலாவதாக உடற்க்கூறுகளானதிறன், வேகம் மற்றும் உறுதி

இரண்டாவதாக மனக்கூறுகளானநுண்ணறிவு, வலிமை மற்றும் கவனம்

மூன்றாவதாக மேற்க்கூறிய அனைத்து திறனும் அடங்கிய வீரம் அவளிடம் அதிகம் இருந்தது.

                       ###################


நாடியா முழுமதிப்பெண் பெற்ற போட்டியின் காணொளி: