Tuesday, December 11, 2012

குத்து(கடி)சண்டை



விளையாட்டில் சில நேரங்களில் செய்யப்படும் சிறு தவறுகள் அவ்விளையாட்டு வீரரின் வாழ்வை எந்த அளவு மாற்றும் என்பதற்க்கு பல உதாரணங்கள் இருந்தாலும் மைக்டைசனின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வும் சிறந்த உதாரணமாகும்.

ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் மைக்டைசனால் ஹோலிஃபில்டின் தாக்குதலை எதிர்க்கவே முடியவில்லை.ஒவ்வொறு சுற்றிலும் பலத்த அடி.ஆறாம் சுற்றின் இறுதியில் மாமிசமலை போல சாய்க்கப்பட்டார்.  

மைக்டைசனால் ஹோலிஃபில்டுக்கு மீண்டும் சவால் விடப்பட்டது.சவாலை ஏற்றுக்கொண்டார் ஹோலி. சுண்டெலிகளுடன் மோதுவதை விட சிங்கத்தோடு மோத அவர் பெரிதும் விரும்பினார். கோபத்தின் குரல் (SOUND OF FURY)  என்று அழைக்கப்பட்ட அந்த போட்டி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ்விகாஸில் நெவேடா மாகாணத்தில் உள்ள M.G.M கிராண்ட் கார்டன் அரினாவில் ஜுன் 28ம் நாள் 1997ல் போட்டி நிர்ணயம் செய்யப்பட்டது. பிற்காலத்தில் இப்போட்டி ஹோலிஃபில்டு – டைசன் II என்று சிறப்பு பெயர் இடப்பட்டு நினைவுபடுத்தப்பட்டது.
போட்டிநாளும் வந்தது போட்டி தொடங்கியதும் ஹோலிஃபில்டின் கை ஓங்கியிருந்த்து.முதல் இரண்டு சுற்றிலும் ஹோலி எளிதில் முன்னணி வகித்தார்.முதல் சுற்றில் 2:19 நிமிடத்தில் ஹோலிஃபில்டு டைசனை தடுமாற வைத்துவிட்டார்.சுதாரித்த டைசன் ஹோலிஃபில்டை பின்னோக்கி தள்ளிவிட்டார். இரண்டாம் சுற்றின் 0:32 நிமிடத்தில் டைசனின் குத்துகளை தொடர்ந்து தடுத்த ஹோலி டைசனின் வலது கண்ணிண் மேல்புறம் அடித்தார்.அது தவறு என்று வாதிட்டார்.

மூன்றாம் சுற்று ஆரம்பித்த்து. டைசன் ஆடுதளத்தில் இறங்கும் போது தன் பல்கவசத்தை அணியாமல் இறங்கினார். நடுவர் மீஸ் லெனனின் கண்டிப்பான முடிவால் மறுபடியும் கவசத்தை அணிந்து கொண்டு ஆட்டகளத்தில் இறங்கினார்.அந்த சுற்றை டைசன் தனது அருமையான் தாக்குதல்களால் ஆரம்பித்தார்.

போட்டி முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே இருந்தன ஹோலி மீண்டும் தனது வாடிக்கையான அதிரடியை மேற்க்கொண்டார்.ஹோலியின் தாக்குதலை தடுக்கும் வண்ணம் அவர் மார்போடு தன் தலையை முட்டிக்கொண்டிருந்தார் டைசன். திடீரென டைசனுக்கு என்ன தோன்றியதோ பழத்தை கொத்தி துப்பும் கிளிபோல ஹோலியின் வலதுபுற மேற்பக்க காதை கடித்து துப்பினார்.(தன் பற்கவசத்தை எப்போது துப்பினார் என்பது இன்னும் அனைவரும் வியக்கும் கேள்வி)

ஹோலி அதிர்ச்சியுற்று (Time out) எனும் ஓய்வு நேரத்தை கேட்டார்.பின்னர் தனது ஓய்வு இருக்கைக்கு சென்றார்.அவரின் பின்னால் நின்று இருந்த டைசன் கொக்கரித்துக்கொண்டிருந்தார்.நடுவர் டைசனை அவரின் ஓய்வு இருக்கைக்கு செல்லுமாறு பணித்தார். நடுவர் துண்டாக்கி எறியப்பட்ட அந்த காதை பார்த்தார்!! போட்டி தொடர சில மணிதுளி தாமதமானது. மேற்கொண்டு போட்டியை தொடரலாமா என்று நிகழ்ச்சி அமைபாளர்கள் திகைத்தனர்.ஆனால் உண்மையிலே மைக்டைசனை போட்டியை விட்டே நீக்கி இருக்க வேண்டும்.ஆனால் நடுவர் மைக்டைசன் குத்திய குத்தின் மூலமே காது கிழிந்தது என தீர்ப்பு வழங்கி டைசனுக்கு 2 புள்ளிகளை குறைத்து ஆட்டத்தை தொடர்ந்தார்.மேசை நடுவர்கள் போட்டி அமைப்பாளர்கள்,ரசிகர்கள் என அனைவரும் திகைப்புற்றனர்.

போட்டி மீண்டும் தொடர்ந்தது மீண்டும் நடந்த மோதலில் இம்முறை ஹோலியின் இடது காதையும் கடித்தார் ஆனால் ஆட்டம் இடைநிறுத்தம் செய்யப்படாமல் தொடரப்பட்டது நடுவர் இம்முறை டைசனின் நடவடிக்கையை கூர்ந்து கவனித்துவிட்டார்.
ஆட்டம் முடிந்தது டைசன் தனக்கு நிகழப்போகும் விபரிதம் தெரியாமல் உற்சாகமாய் கையசைத்துக்கொண்டிருந்தனர்.முடிவை அறிவிப்பாளர் ஜிம்மிலெனான் வாசித்தார். நடுவர் மீல்ஸ் லேன் ஹோலி ஃபில்டின் இரண்டு காதுகளையும் போட்டியின் போது கடித்து துப்பியதால் மைக்டைசனை தகுதி இழப்பு செய்தார்.

டைசன் தனது அறைக்கு செல்லும் போது சில ரசிகர்கள் அவர் மீது தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்தனர்.பின்னர் ரசிகர் கண்ணில் இருந்து அவர் மறைக்கப்பட்டு வேறு வழியாக அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டார். விளையாட்டு சம்மேளனம் மைக்டைசனை வாழ்நாள் தகுதி இழப்பு செய்தது.அவரின் உரிமமும் பறிக்கப்பட்டது.

போட்டியின் சிறு காணொளி



நல்ல ஒரு ஆட்டகாரனை மீட்டெடுக்க வேண்டும் என நிவாடா மாகாண விளையாட்டு குழுமம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை பணயமாக வைத்து டைசனின் விளையாட்டு உரிமத்தை மீண்டும் பெற முயற்சித்தனர்.ஆனால் தளர்த்த முடியவில்லை!! அக்டோபர் 18,1998ஆம் ஆண்டு குழு ஓட்டு மூலம் 4-1 என்ற எண்ணிக்கையில் டைசனின் உரிமம் மீட்கப்பட்டது.

மீண்டும் களத்தில் இறங்கிய டைசனால் முன்பு போல ஆட்டங்களில் ஜொலிக்கமுடியவில்லை தனது 46ம் வயதில் 2008ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்
.
அக்டோபர் 16,2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஒபரா வின்பரேயின்  நேர்காணல் நிகழ்ச்சியில் மைக்டைசனும்,ஹோலி ஃபில்டும் கலந்து கொண்டனர் 12வருடம் கழித்து ஒரே மேடையில் தோன்றினர்.

நிகழ்ச்சியில் ஒரு தருணத்தில் ஒபரா மைக்கிடம் சூடான பதார்த்தம்(காது) வேண்டுமா என்று குறும்புடன் கேட்டார்??

மைக் உடனே அது அவ்வளவு ருசி இல்லை என்று பலமாக சிரிக்கிறார்!!

நான் இன்னும் எனது காதின் சிறிதளவை இழந்துவிட்டேன் என சொல்லி சிரிக்கிறார் ஹோலி ஃபில்டு.

இருவரும் சிரிக்கின்றனர்!

மைக்டைசன் ஹோலி ஃபில்டிடம் பரஸ்பர மன்னிப்பு கோருகிறார்.ஹோலி மனமுவந்து அதனை ஏற்று கொள்கிறார்.

கைத்தட்டல்களோடு நிகழ்ச்சி முடிவடைகிறது...




Wednesday, October 10, 2012

அழகிய புயல்



அழகிருக்கும் இடத்தில் திறமை இருக்காது என்ற சொல்லை பொய்யாக்குவதில் ரஷ்யர்களுக்கு இணையானவர்கள் யாவரும் கிடையாது குறிப்பாக பெண்கள். அன்னகோர்னோவிக்கா முதல் ஷரபோவா வரை....

ரஷ்யர்கள் பெரும்பாலும் விளையாட்டை பெரிதும் நேசிப்பர் காழினி என்ற பிளம்பரும் அவ்வாறே தன் மகளை ஜிம்னாஸ்டிக் எனப்படும் உடற்பயிற்சி விளையாட்டில் சேர்த்தார்.
மற்ற சிறுமிகளோடு பயிற்சியை தொடர்ந்த அந்த பெண் மற்றவர்களை விட நெடுநெடுவென 5அடி வரை வளர்ந்தாள்.இவள் உயரம் வளைந்து விளையாடும் இவ்விளையாட்டிற்க்கு சரிவராது என பயிற்சியாளர் இவளை நிராகரித்தார்.அதிலிருந்து மீண்டுவர மிகப்பெடிய தடையை தாண்ட வேண்டியது இருந்தது

போல்வால்ட் எனும் கொம்புன்றி தடைதாண்டும் விளையாட்டை இம்முறை தேர்ந்தேடுத்தாள் அன்று முதல் அவள் தடையை மட்டும் தாண்டவில்லை பல சாதனைகளை தாண்டினாள் வரலாற்றில் தகர்க்கமுடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரி யேலேனா இஸின்பயேவா


1998ஆம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தன் 16 வயதில் முதல் வெள்ளிபதக்கத்தை 4மீட்டர் உயரம் தாண்டி பெற்றார்.

1999ஆம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற உலக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தன் முதல் தங்கபதக்கத்தை 4.10 மீட்டர் உயரம் தாண்டி பெற்றார்.

தன் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை அடைந்து தீரவே வேண்டும் என 2000ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை நோக்கி படையெடுத்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்க வில்லை பெருத்த ஏமாற்றத்தோடு தகுதி சுற்றுக்கு கூட இடம் பெறாமல் வெளியெறினார்.

தொடர்ந்து 2001,2002 சினியர் ஜுனியர் போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்றாலும் அவரின் கனவான ஒலிம்பிக் தங்கம் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் இந்த போட்டிகள் அவரின் தனியளவு சாதனைகளை அதிகரித்துக்கொண்டே வந்தது. 2003ஆம் ஆண்டுக்கான 23வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்க்கும் போட்டியில் 4.65 மீட்டர் தாண்டி தங்க பதக்கம் பெற்றார்.

எதிர்பார்த்த நாளும் வந்தது ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின எல்லா முன்னணி வீராங்கனைகளையும் பின்னுக்கு தள்ளினார் யேலேனா அது வரை இருந்த அனைத்து ஒலிம்பிக் சாதனைகளையும் நம்பிக்கை என்னும் தன் கொம்பை ஊன்றி தாண்டி தகர்த்தெறிந்தார். அப்போட்டியில் 4.91 மீட்டர் உயரம் தாண்டி தன் முதல் தங்க பதக்கத்தோடு புதிய உலக சாதனையை நிகழ்த்தினார். இதே ஆண்டு 8 புதிய உலக சாதனைகளை நிகழ்த்தினார்.


2005ஆம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற பெண்களுக்கான போல்வால்ட் 5.01மீட்டர் தாண்டினார் இரண்டாவதாக வந்தவரைவிட 41செமீ அதிகமாக தாண்டினார் இந்த சாதனை இதுவரை தகர்க்காமல் உள்ளது. போல்வால்ட் போட்டியில் 5 மீட்டர் தூரத்தை தாண்டிய முதல் மற்றும் கடைசி வீராங்கனை இவரே.

சினாவில் நடைபெற்ற 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எளிதில் வெற்றிபெறுவார் என அனைவராலும் கணிக்கப்பட்டார். யாரின் கணிப்பையும் பொய்யாக்காமல் 5.05 மீட்டர் உயரம் தாண்டி தன் பழைய சாதனையை முறியடித்து தங்கம் வென்றார். அதை தொடர்ந்து உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளிலும் 5 மீட்டர் உயரத்தை கடந்து சாதனை படைத்தார்.


யேலேனாவின் சாதனைகள்

28 உலக சாதனைகள் (உட்புற வெளிப்புற போட்டிகள் சேர்த்து).

2004 முதல் 2009 வரை தொடர்ந்து வெற்றிகள்.

உலக அளவிலான் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 தங்க பதக்கங்கள்.

இரண்டு உலக சாதனையாளர் பட்டம்.

தொடர்ந்து இரட்டை தங்க பதக்கங்கள்.(2004,2008)

2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முன்றாவது முறையாக தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பார் என அனைத்து விளையாட்டு ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். போட்டியில் கலந்துக்கொண்ட அவர் முகத்தில் உற்சாகமே இல்லை சோர்வுடன் காணப்பட்ட யேலேனா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

போட்டிக்குப்பிறகு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த யேலேனா போட்டி நடைபெறும் முன்னர் தனக்கு உடல்நிலை சரியில்லை மேலும் என் தொடக்க தூரத்தை கூட அடையமுடியாத அளவு காலில் வலி உண்டானது ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் எனினும் என் போல்வால்ட் முடிவை தங்கத்தோடு முடிக்க விரும்புகிறேன் அதற்க்கு இன்னும் நான்கு ஆண்டுகள் பொறுக்க வேண்டும் 2016ல் எனக்கு 34 வயதாகி இருக்கும் ஆனாலும் என் உறுதி எனக்கு வெற்றியளிக்கும் என பேட்டி கொடுத்தார்.

இந்த போட்டியில் அமெரிக்காவின் ஜெனிஃபர் சுஹிர் 4.45 மீட்டர் உயரம் தாண்டி தங்கமும், கியூபாவின் யாரிஸ்லி அதே உயரம் தாண்டி வெள்ளி பதக்கமும் நமது நாயகி யேலேனா 4.40மீட்டர் தூரம் தாண்டி வெண்கலபதக்கம் பெற்றனர்.

அடுத்த ஒலிம்பிக்கில அவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ விளையாட்டு ரசிகர்களில் மனதின் அரியாசனத்தை எப்போதோ பெற்று விட்டார்.






Thursday, October 4, 2012

மந்திரவாதி (THE WIZARD)





1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் ஆட்டத்தின் போது ஜெர்மனியுடனான இவரின் ஆட்டத்தைக்கண்ட ஹிட்லர் உடனே இவரை அழைத்து தம் தேசிய அணிக்கு விளையாடுமாறு கேட்கிறார் இப்போது இந்தியாவில் வகிக்கும் ராணுவ பதவியை விட மேலான பதவியை தருவதாக வாக்களிக்கிறார் நம்மில் எத்தனை பேர் அதை மறுத்திருப்போம் ஆனால் உடனடியாக தயான்சந்த் தன் தாய் நாட்டுக்கு விளையாடுவது தனக்கு சிறப்பு என்று மறுத்துரைத்தார்.

இந்தியாவின் தலைசிறந்த ஹாக்கி ஆட்டகாரர்களில் முதன்மையானவர் தயான்சந்த். இவர் உலகின் சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

விளையாட்டை உயிர் மூச்சாக நினைத்த தயான்சந்த் சிறுவயதில் விளையாட்டை 
விரும்ப வில்லை.ஆனாலும் மல்யுத்த போட்டிகளை பார்க்க ஆர்வம் காட்டினார்.

இவர் தந்தையார் கோமேஸ்வர் தத் அடிப்படையில் ராணுவ அணியில் ஒரு ஹாக்கி வீரர் இவர் பின்னாளில் இவ்விளையாட்டில் இவ்வளவு பெயர் பெற இது கூட ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

தயான்சந்த் ராணுவத்தில் முதலில் இவர் சேரும்போது ஹாக்கி விளையாட்டின் அடிப்படை கூட தெரிந்திருக்கவில்லை அப்போது அவருக்கு 16 வயது.திடீரென ஹாக்கி விளையாட்டின் மீது அளவில்லா ஆர்வம் தோன்றியது. வேலை நேரம் போக இரவு நேரங்களில் நிலவொளியில் தன் ஆட்ட பயிற்சியை இடைவிடாது செய்வார்.
இவரை சக ஆட்டகார்ர்கள் சந்த்(நிலவு) என்று அழைத்தனர். இதற்கு இரண்டு காரணம் தன் பெயரில் நிலவு வருவதாலும் அல்லது நிலவொளியில் பயிற்சி மேற்க்கொண்டதாலும் இருக்கலாம் என்கின்றனர்.

இவர் மட்டையோடு பந்தை இயக்கும் விதம், எதிரணியினரிடம் ஏமாற்றி முன்னேறுதல், பந்துக்கட்டுப்பாடு போன்றவற்றால் எதிரணி வீரர்களால் மந்திரவாதி (THE WIZARD) என அழைக்கப்பட்டார்.

1932ம் ஆண்டு நடந்த ஓலிம்பிக் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிரான ஹாக்கிப்போட்டியில் இந்தியா 24க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சாதனை இன்று வரை தகர்க்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது. இப்போட்டியில் தயான் எட்டு கோல்களைப்போட்டார்.இந்த வருடம் இந்தியா ஆடிய போட்டிகளில் மொத்தம் 338 கோல்களைப்போட்டது இதில் இவரது பங்கு 133 ஆகும்.

1935ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் பயணம் செய்து மொத்தம் 43 ஆட்டங்களை ஆடியது இதில் இந்தியா அடித்த கோல்களின் எண்ணிக்கை 584 இதில் தயான் சந்த் அடித்தது மட்டும் 201 கோல்கள்.

உலக அளவில் நடைபெற்ற ஆட்டங்களில் இவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 400 ஆகும்.

இவரது வீரத்திற்க்கு உதாரணமாக விளங்கியது ஒரு நிகழ்வு பெர்லினில் நடைபெற்ற அப்போட்டியில் இவரின் ஆட்டத்தை தடுக்கும் விதமாக ஜெர்மானிய வீரர் இவர் முகத்தில் கடுமையாக தாக்கினார் தயானின் பல் உடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.சிகிச்சை முடிந்த கையோடு வாயில் பஞ்சை திணித்துக்கொண்டு விளையாடினார் சந்த். இந்தியா 8க்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது இதில் இவரின் பங்கு 6 கோல்களாகும்.

தயான்சந்த் ஒரு தன்னலமற்ற வீரர். கோல் அடிக்கும் வாய்ப்பை இவரின் சக வீரர்களுக்கும் உண்டாக்குவார்.

இவரின் ஆட்டத்திறன் மூலம் முறையே 1928,1932,1936 என்று வரிசையாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்க பதக்கம் பெற்று தந்துள்ளார்.

இவரது மகன் அசோக்குமாரும் 1975ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடினார்.

தனது 42வது வயது வரை தொடர்ந்து நாட்டுக்காக இவர் விளையாடினார் 1947-48ல் தனது ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டார் அவ்வருடம் நடைபெற்ற 22 போட்டிகளில் தயான் அடித்த கோல்களின் எண்ணிக்கை 61.

விளையாட்டு ஒய்விற்கு பின் பஞ்சாபின் பாட்டியாலா நகரில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியாளராக பணி அமர்த்தப்பட்டார் நல்ல விளையாட்டு வீரராக திகழ்ந்த இவரால் நல்ல பயிற்சியாளராக ஜொலிக்க முடியவில்லை.

1956ல் ஆண்டு இந்திய அரசு பத்மபூசண் விருது வழங்கி சிறப்பு செய்தது.

1979ஆம் ஆண்டு தயான்சந்த் இயற்கை எய்தினார்.

1980ஆம் ஆண்டு இந்திய அரசு இவரின் உருவ தபால் தலையை வெளியிட்டு சிறப்பு செய்தது.



தயான்சந்த் தன் வாழ்நாள் முழுவதும் ஹாக்கி விளையாட்டிற்க்காக பல்வேறு பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்று இருந்தாலும் வியன்னாவில் அவருக்கு வைக்கப்பட்டுள்ள சிலை மகத்தானது அதில் இவர் நான்கு வீரர்களின் திறனுக்கு ஈடானவர்  என்று பொறிக்கப்பட்டுள்ளது.

தயான் சந்த் பிறந்த தினமான 29 ஆகஸ்ட் நாளை தேசிய விளையாட்டு தினமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

மிகவிரைவில் பாரதரத்னா விருதையும் எதிர்பார்ப்போம்.







Wednesday, October 3, 2012

கருப்பு முத்து (பீலே)



வெற்றி என்பது திடிரென நடைபெறாது அது கடின உழைப்பு,கற்றல்,பயிற்சி,தியாகம் போன்ற குணநலன்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலமே அடைய முடியும். எதை செய்கிறாயோ அதை மனமுவந்து செய் – பீலே.

1970ஆம் ஆண்டு உலககோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தின் போது இத்தாலிய தடுப்பு ஆட்டக்காரர் டார்ஸியோ பார்கனிக் என்பவர் போட்டி நடப்பதற்க்கு முன்னர் பீலேவை தன்னால் எளிதில் மடக்க முடியும் அவரும் எலும்பு சதையால் ஆன சாதரண மனிதன் தானே என எண்ணிணார். ஆனால் போட்டி முடியும் போது அவரோடு அவர் தாய் மண்ணையும் தோற்க்கடித்திருந்தார் பீலே.

பிரேசிலில் பீலேவை “Perola Negra”  பிரோலா நீக்ரா என்றனர் இதன் அர்த்தம் கருப்பு முத்து.

பீலே சிறுவயதில் வறுமையின் காரணமாக காலணி உறைகளில் காகிதங்களை திணித்து பந்தாக மாற்றி நண்பர்களோடு விளையாடுவார்.
பீலே சிறுவயதில் தன் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரைக்கொண்டு ஒரு கால்பந்து குழுவை உண்டாக்கினார்  “Shoeless once” காலணி இல்லாதவர்கள் என்பது அவர் உண்டாக்கிய அணியின் பெயராகும்.

தெருக்களில் பிலே விளையாடுவதை கண்ட பிரேசில் அணியின் பிரபல ஆட்டக்காரர் வால்டிமர் பிரிட்டோ உள்நாட்டு அணியான சாண்டோஸ் அணியிடம் இவரை ஒப்படைத்து ஒருநாள் இவன் கால்பந்து விளையாட்டில் உலக அளவில் புகழ் பெறுவான் என் வாக்குரைத்தார்.
சாண்டோஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகும் போது பீலேவின் வயது 15. 1956 செப்டம்பர் 7ம் தேதி தன் அணிக்காக கொரிண்டியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நான்கு கோல்களைப்போட்டு அனைவரையும் தன் பக்கம் திருப்பினார் பீலே.

இவரது ஆட்டத்திறன் இவரை அடுத்த கட்டத்திற்க்கு முன்னேற்றி சென்றது பிரேசில் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
17வயதில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இளம் வீரர் எனப்பெயர் பெற்றார் சுவிடனுக்கு எதிராக விளையாடிய அந்தப்போட்டியில் இரண்டு கோல்களை அடித்து தாய் நாட்டுக்கு வெற்றி தேடித்தந்த்தார்.

பீலே தன் வாழ்நாள் முழுவதும் 1283 முதல் தர கோல்களை அடித்துள்ளார் மேலும் 97 ஹாட்ரிக் கோல்களும் ஒரே ஆட்டத்தில் 4 கோல்களை 31 முறையும் 8 கோல்களை ஒரு முறையும் அடித்துள்ளார் இதில் 77 கோல்கள் பிரேசில் அணிக்காக அடித்ததும் அடக்கம்.

மூன்று உலகக்கோப்பை இரண்டு உலகக்குழு வாகையர் பட்டம் ஒன்பது முறை சா பவுலோ மாநில அணி வாகையர் பட்டம் என வெற்றிக்கணக்கினை வைத்துள்ளார்.

1969ம் வருடம் நவம்பர் 19ம் தேதி பீலே தனது 100வது கோலினை அடித்தபோது அவரது ரசிகர்கள் உற்சாக மிகுதியால் மைதானத்தில் நுழைந்து ஆனந்த நடனமாடினர் அவர்களை அப்புறப்படுத்தி ஆட்டத்தை தொடர ஆட்ட வீரர்கள் அரைமணி நேரம் காத்திருந்தனர்.

1967ஆம் ஆண்டு நைஜிரியாவில் இரண்டு இனக்குழுவினரிடையே கடுமையான் உள்நாட்டுப்போர் நடைபெற்ற போது இவர் விளையாடுவதை காணுவதற்க்காக 48 மணி நேரம் சண்டை கைவிடப்பட்டது.

கால்பந்து விளையாட்டின் முடிவில் இரண்டு அணியினரும் நட்பு ரீதியாக தங்களது சட்டைகளை மாற்றிக்கொள்வது வழக்கம்.பெரும்பாலும் பீலேவின் சட்டையை மாற்றிக்கொள்வதில் எதிரணிவீரர்கள் பெருமையாக நினைப்பர். இவரது குழுவினர் இவருக்காக குறைந்த்து 25 முதல் 30 சட்டைகளை ஒவ்வொரு போட்டியின் போதும் கொண்டு செல்வர்.

பிரேசில் அணிக்காக சகவீரர் காரின்காவோடு இணைந்து ஆடிய 49 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியடைந்தது இல்லை.

பீலேவின் தந்தையும் ஒரு கால்பந்தாட்ட வீரர்தான் ஒரு ஆட்டத்தில் அவர் தலையால் முட்டி 5 கோல்களைப்போட்டார். அந்த சாதனையை பீலேவால் கடைசிவரை உடைக்கமுடியாமல் போனது அவர் அதிக பட்சமாக 4 கோல்கள் மட்டுமே போட்டார். தனது 100வது கோலினை தலையால் முட்டி போட்ட போது அதனை தன் தந்தைக்கு சமர்ப்பணம் செய்தார்.

பீலேவின் கடைசியாட்டம் 1977ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நடைபெற்றது. சாண்டோஸ் மற்றும் நியூயார்க் இடைப்பட்ட போட்டியில் பீலேவை கெளவுரபடுத்தும் விதமாக இரண்டு அணியிலும் அவரை ஆடுமாறு பணிக்கப்பட்டது. முதல் பாதியில் சாண்டோஸ் அணிக்காகவும் இரண்டாம் பாதியில் நியூயார்க அணிக்காகவும் விளையாடினார்.

நீங்கள் மரடோனா இதில் யார் சிறந்தவர் என பலமுறை கேட்கப்பட்ட கேள்விக்கு 2006ம் ஆண்டு விளையாட்டாக “அவர் எத்தனை கோல்கள் தனது வலதுகாலினாலும் தலையால் முட்டியும் அடித்துள்ளார்? என வேடிக்கையாக கேட்டார்.

பவுல் முறையில் கோல் அடிப்பது கோழைத்தனம் என்கிறார்.

1995ஆம் ஆண்டு பிரேசில் அரசு பிலேவுக்கு உயரிய விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை வழங்கியது.

1997ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இவருக்கு புகழ்பெற்ற நைட்வுட் என்னும் பட்டத்தினை வழங்கியது.

1999ஆம் ஆண்டு உலக ஒலிம்பிக் குழுவினரால் நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்று அறிவிக்கப்பட்டார்.

2000மாவது ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நூற்றாண்டின் இரண்டாவது சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதினை வழங்கியது. அதற்குமுன் முகமது அலிக்கு அவ்விருது வழங்கப்பட்டது.

பீலேவின் வார்த்தைகளில் வெற்றி என்பது முதலில் வரவேண்டும் என்று நினைத்தால் வரவேண்டும் இரண்டாவதாக வருபவன் நிராகரிக்கப்படுவான் என்று கூறுகிறார்.

மற்ற வீரர்கள் பூமியில் பிறந்து சொர்கத்துக்கு செல்கின்றனர் ஆனால் பீலே சொர்கத்தில் பிறந்து பூமிக்கு வந்துள்ளார்.- ஜியோஃப்ரி கிரின்(இங்கிலாந்தின் பிரபல விளையாட்டு விமர்சகர்)









Thursday, September 27, 2012

சுவையான கால்பந்து விளையாட்டு தகவல்கள்

·         1950ம் ஆண்டு உலக கால்பந்து விளையாட்டுப்போட்டியில் இந்தியர்கள் ஃபூட்ஸ் இல்லாமல் வெறும் காலுடன் விளையாடியதால் உலக கால்பந்து சம்மேளத்தினால் போட்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

·         1975ம் ஆண்டு சிலி மற்றும் உருகுவேக்கு இடையிலேயான போட்டியின் போது 19 வீரர்கள் ஃபவுல் முறையில் வெளியேறியதால் ஆட்டம் கைவிடப்பட்ட்து.

·         சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் ஒரு போட்டியின் போது சுமாராக 6மைல்கள் தொலைவு ஓடுகிறார்.

·         பிரான்சு நாட்டின் நட்சத்திர வீரர் ஜிடேன் தன் வாழ்நாள் முழுவதும் ஆஃப் சைடு எனும் ஃபவுல் முறையை செய்தது இல்லை.

·         கால்பந்தாட்ட கோல் கீப்பர்கள் 1913ம் ஆண்டு வரை மற்ற வீரர்கள் அணியும் அதே நிறத்திலான உடைகளையே அணிந்தனர்.

·         1930 மற்றும் 1950ஆம் ஆண்டை தவிர மற்ற அனைத்துப்போட்டிகளிலும் ஐரோப்பிய அணிகள் இறுதிப்போட்டிகளில் பங்கேற்று உள்ளன.

·         முதன்முறையாக தொழில்முறையாக கால்பந்து விளையாடிய கருப்பின கால்பந்தாட்ட வீரர் ஆர்தர் வார்டன்.   
      
·         உலகக்கோப்பை கால்பந்துப்போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது 1 பில்லியன் மக்களால் பார்க்கப்படுகிறது.    
         
·         அதிக முறை உலகக்கோப்பை வென்ற அணி பிரேசில் 5 முறை.

·         உலகக்கோப்பை போட்டிகளின் போது முதல் முறையாக சிலி நாட்டின் கார்லோஸ் காசிஸ்லி என்வருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட்து.

·         உலக்க்கோப்பை போட்டிகளில் 210 கோல்களை அடித்து பிரேசில் அணி முன்னிலை வகிக்கிறது.

·         பிரேசிலின் நட்சத்திர வீரர் பிலே உலக கோப்பை வென்றதற்க்காக 3 தங்கப்பதக்கங்களை முறையே 1958,1962 மற்றும் 1970ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

·         உலகக்கோப்பை போட்டிகளில் 99 ஆட்டங்களில் பங்கேற்று ஜெர்மனி அணி முன்னிலை வகிக்கிறது.

·         மடகாஸ்கர் அணி அடோமா அணிக்கு எதிராக விளையாடிய போது 149 சொந்த கோல்களை போட்டது முந்தைய போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்பினால் கோபம் கொண்ட அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க சொந்த கோல் கம்பங்களில் கோல்களை அடித்தனர்.

·         உலகக்கோப்பை போட்டிகளில் குறைவான ரசிகர்கள் கலந்து கொண்ட போட்டி 1930ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் நடைபெற்றது அதில் வெறும் 300 பார்வையாளர்களே கலந்து கொண்டனர்.

·         1900ம் வருடம் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து விளையாட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி முதல் தங்கப்பதக்கத்தை பெற்றது.



Thursday, September 20, 2012

கூடைப்பந்து விளையாட்டு உருவான கதை



எல்லா விளையாட்டுகளும் ஏதாவது பழங்கால விளையாட்டிலிருந்தோ அல்லது மற்ற விளையாட்டுகளை சார்ந்தோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஆனால் கூடைபந்து விளையாட்டு இதற்கு விதிவிலக்கு எந்த விளையாட்டையும் பிரதிபலிக்காமல் தனிப்பட்ட முறையில் ஜேம்ஸ் நைஸ்மித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நைஸ்மித் 1861-ம் ஆண்டு கனடாவில் அல்மாண்டி என்னும் ஊரில் பிறந்தார். மெக்கில் பல்கலைகழகத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பட்டம் பெற்று 1891-ம் ஆண்டு அமெரிக்காவின் YMCAசர்வதேச பயிற்சி பள்ளியில்(இன்று ஸ்பிரிங்ஃபில்டு கல்லூரி) பணிக்கு சேர்ந்தார். பணியில் சிறப்பாக இருந்தார் நைஸ்மித். புதுவகையான பயிற்சிகளையும் ஆட்டங்களை உண்டாக்குவதில் தனித்திறமை பெற்று வழங்கினார்.

அமெரிக்காவின் கடும் பனிகாலங்களில் மாணவர்கள் வெளிப்புற ஆட்டங்களான கால்பந்து,வேகப்பந்து போன்ற ஆட்டங்களை தவிர்த்தனர். இதனால் மாணவர்களிடையே உடல்தகுதி நிலை குறைந்து அவர்கள் உடல்நிலையில் மாற்றம் உண்டானது.இந்நிலையை தவிர்க்க எண்ணினார் நைஸ்மித் 2வாரங்கள் விடாமல் யோசனை செய்து சில விதிமுறைகளோடு உள்ளரங்கு விளையாட்டு ஒன்றை கண்டுபிடித்தார். மேலும் அவ்விளையாட்டு கால்பந்து விளையாட்டை போல வேகமும்,நுட்பமும் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என விரும்பினார்.

நைஸ்மித் தனது சிறுவயது விளையாட்டான மலைமேல் வாத்துஎன்ற விளையாட்டை அடிப்படையாக வைத்து(மலைமேல் ஏறும் வாத்தை குறிவைத்து கல்லால் தாக்குவது) தனது புது விளையாட்டை கண்டுபிடித்தார்.உயரமான இடத்தில் ஒரு கூடையை கட்டி குறிவைத்து பந்தை உள்ளே போட்டால் புள்ளிகள் வழங்கப்படும். இப்போது இருக்கும் ஆடுகளத்தின் அளவில் பாதியளவே அப்போது அவர் உண்டாக்கிய ஆடுகளம் இருந்த்து இருபுறமும் 10அடி உயரம் கொண்ட கம்புகளில் பழக்கூடைகள் கட்டப்பட்டன அதில் விளையாட அவர் கால்பந்தை தேர்ந்தெடுத்தார் ஆட்டத்திற்க்கு 13 விதிகளை அவர் வகுத்தார். விளையாட ஆரம்பித்ததும் அவருக்கு சிக்கல் உண்டானது கூடைகள் அடியில் மூடப்பட்டு இருந்ததால் ஒவ்வொருமுறையும் பந்தை எடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
ஒவ்வொரு முறையும் நீண்ட குச்சி வைத்து எடுக்க சிரமமாக இருந்ததால் கூடைகளின் அடிப்புறத்தை வெட்டி விட்டார்.

காலப்போக்கில் இவ்விளையாட்டு விதிகளில் பலமாற்றங்கள் செய்யப்பட்டு இன்று உலகின் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்கின்றது.அமெரிக்க நாடுகளில் தொழில் முறை கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்  கோடிகளில் புரளுகின்றனர்.

இந்த விளையாட்டு உலக அளவில் இவ்வளவு புகழ்பெறும் என்பதை இதை கண்டுபிடித்த ஜேம்ஸ்மித்திடம் முன்னரே சொல்லியிருந்தால் அவர் கட்டாயமாக நம்பியிருக்க மாட்டார். இவ்விளையாட்டை இவ்வளவு பிரபலமாக்கியதில் அமெரிக்க YMCA பள்ளியின் பங்கு மிகவும் மகத்தானது.1936-ம் ஆண்டு முதல் கூடைபந்தாட்டம் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.






      

Thursday, February 9, 2012

தாய் மனம்


வேலை நிமித்தமாக நானும் நண்பனும் மஹாபலிபுரம் வரை சென்றிருந்தோம்.வேலை முடிய இரவு 9மணி ஆகிவிட்டது பேருந்தில் சென்றதால் திரும்பவும் பேருந்துக்காக காத்திருக்கவேண்டி இருந்தது. மற்ற வழி தடங்களுக்கான பேருந்துகள் வந்து கொண்டும் போய்கொண்டும் இருந்தன எங்கள் தட பேருந்து அதிக நேரம் காக்க வைத்து பின்னர் கடைசியாக வந்து சேர்ந்தது. கடைசி சீட்டில் இடம் பிடித்து நானும் நண்பனும் அருகருகே உட்கார்ந்து கொண்டோம்.பக்கத்தில் மூன்று பெண்களும் முன் சீட்டில் இரண்டு பெண்களும் உட்கார்ந்து கொண்டனர்.அனைவருக்கும் 35ந்திலிருந்து 40வயது இருக்கும்.ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்த பெண்ணை வழி அனுப்ப ஒருவன் வந்து இருந்தான்.அவன் வார்த்தைக்கு வார்த்தை அந்த பெண்ணிடம் என்ன மறந்துடாத என் நம்பற ஞாபகம் வச்சிக்க என்று சொல்லி ரூபாய் தாள்களையும் வழங்கிகொண்டிருந்தான்.வண்டி கிளம்பியது மற்ற பெண்கள் கொள் என்று சிரித்தனர்.

ஒருவள் என்னடி சரியான சொக்குப்பொடி போட்டுட்ட போல?!

இல்லக்கா இன்னைக்கு கம்பெனி கொஞ்சம் அதிகமா கொடுத்திட்டேன் போல பையன் கிறங்கிட்டான்.

எங்களுக்கு ஒருவழியாக புரிந்தது யாருக்கு நடுவில் உட்கார்ந்து இருக்கிறோம் என்று!

மற்ற ஒரு பெண் மனுசனுங்களாடி இவனுங்க என்னதான் காச கொடுத்திட்டாலும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவனுங்க அஞ்ஜி பேரா வரானுங்க கால தூக்க கூட முடியல நாளைக்கு எப்படித்தான் நடக்கப்போறேனோ?!!

அந்த காஞ்சிபுரத்து காரிய பார்த்தியாக்கா நம்ப கஸ்டமர வளச்சி போடுறதே அவளுக்கு வேலயாப்போச்சி

பாவம் கஷ்ட படுறான்னு பாத்தா நம்மளுக்கே அவ வேல காட்டுறுவா போல
நாளைக்கு அவ நம்ம பக்கம் வந்தா நானே அவள ஓட ஒட அடிப்பேன்கா.

ஒன்று தெரிந்த்து இவர்கள் அனைவரும் சென்னையிலிருந்து கூட்டாக வந்து தொழில் செய்கின்றனர் என்று,முன்னாடி போய் உட்காரலாம்னு பார்த்தா அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன. ஆனாலும் மனதில் ஒரு சபலம் என்னதான் பேசுறங்கன்னு கேட்போமே போகிறவரை டைம் பாஸ் ஆகுமே.......

தல சரியான சீட்ல உட்கார்ந்துட்டோம் நமக்கு சரியான லக்கி பிரைஸ் இதுல எதாவது ஒன்ன தட்டி என்ஜாய் பண்ண வேண்டியதுதான் என்ன சொல்ற?

அடங்குடா ஒழுங்கா இருக்கிறவனே ஆயிரம் கஷ்டத்துல போய் மாட்டிக்குறான் இது நமக்கு தேவயில்லாத ஒண்ணு பார்த்தியா சந்தோசபடு ஜாலியா நாலு வார்த்தை பேசு அத வுட்டுட்டு பிக்கப்பு டிராப்புன்னு தேவையில்லாம பேசாதே.

என்ன தம்பி எங்க போய்ட்டு வரீங்க?

வேல விஷயமா வந்தோம் முடிச்சிட்டு வீட்டூக்கு போய்ட்டு இருக்கோம்.

நண்பன் உடனே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

அப்படியாப்பா ரொம்ப தேங்ஸ் பா! அழகு என்னப்பா அழகு ஒரு நாள் எல்லோரும் இழக்க வேண்டிய ஒண்ணு தானே. சரி என்ன இப்படி ரசிக்கிறியே என் வயசென்னன்னு உன்னால சொல்ல முடியுமா?

ஒரு 35ந்து இல்லனா 38 வயது சரியா?
எப்படிப்பா இப்படி சரியா சொல்லுற. எனக்கு 52 முடிந்து 53 தொடங்க போகுது எங்களோட முலதனமே உடம்புதான் இது சரியில்லனா ஒரு பய சீந்த மாட்டான்.
உனக்கென்னப்பா வயசாகுது?

எனக்கு 27 அவனுக்கு 26 ஆகுது.

அட என் புள்ள வயசுதான் உங்களுக்கு.இங்க வர பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கு சினிமா ஆசையால வந்தவங்க பணத்துக்காக வந்தவங்கன்னு நிறைய கதை இருக்கு.இதோ என் கூட வர்ராளுங்களே இவங்களுக்கல்லாம் நான் தான் தலைவி போல எதாவது பிரச்சன, கஷ்டம்னா என் கிட்டதான் வந்து சொல்லுவாளுங்க என்னால முடிஞ்ச வரைக்கும் தீர்த்து வைக்கிறேன்.

தப்பா நினைக்காதிங்க நீங்க எப்படி வந்தீங்க?

ஒரு காலத்துல நான் இந்த தொழில்ல கொடிகட்டி பறந்தேன்.கையில பணம் புறண்டதுன்னு சொல்லுவாங்க ஆனா என் கிட்ட பொங்கியதுன்னு சொல்லலாம்.எங்கள கூட்டி கொடுக்கும் ஒருவனே எனக்கு தூண்டில் போட்டான் அந்த அறியாத வயதில் அவன் பேச்சுக்கு மயங்கினேன்.பகலில் மற்றவர்களுக்கும் இரவில் அவனுக்கும் மனைவியாக இருந்தேன்.குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்த்தும் சொந்தமாக மளிகை கடை தொடங்கலாம் என்று ஆசை வார்த்தைகளை காட்டினான்.அவன் பேச்சுக்கு மகுடிக்கு மயங்கும் பாம்பை போல மயங்கினேன்.ஒரு நாள் லெட்டர் ஓண்ணு எழுதி வைத்திட்டு ஓடிட்டான். அதுல என்ன வழக்கம் போல கதைதான் எனக்கு குடும்பம் இருக்கு நீ எனக்கு தெய்வம் போல உன்ன சாவர வரைக்கும் மறக்கமாட்டேன்னு புலம்பி வச்சிருந்தான். போனவன் சும்மா போகல வயத்துல ஒண்ண குடுத்துட்டு போய்ட்டான்.வேற என்ன பண்ண முடியும் மீண்டும் தொழில்ல மும்முறமா இறங்கினேன்.ஆனா குட்டி போட்ட ஜீவனுக்கு இந்த தொழில்ல மார்க்கெட் உடனே போய்டும்.அது சரி இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு.
சரிப்பா நீங்க எங்க இறங்கனும்?

என்ன மச்சி ஏதாவது பிட்ட போட்டு உஷார் பண்ணலாம்னு பார்த்தா நீ வேலைக்கி ஆக மாட்ட போல?

என்னப்பா ஏதோ குசு குசுன்னு சொன்னா நானும் கேட்பேன்ல?.

நாங்க கோயம்பேடு வரை போறோம்.உங்க குழந்தை என்ன ஆச்சு? விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லனா விட்டுருங்க.

கண்டிப்பா சொல்றென் உங்கள பார்த்ததும் எனக்கு அவன் நியாபகம்தான் வந்தது அதனால தானே இவ்ளோ நேரம் பேசிக்கிட்டே வந்தேன்.தொழில விட்டுட்ட வயசான அம்மா ஒருத்தங்க துணையோடு அவன வளர்த்தேன்.ஆரம்பத்துல தாலி கட்டாத மனைவியா பல பேர் என்ன ஏத்துகிட்டாங்க ஆனா என் மகன விட்டுட்டு வர சொன்னாங்க.வாழ்க்கையே அவனுக்குத்தான்னு ஆன பிறகு விட்டுட்டு போற எண்ணமெல்லாம் ஓடி போயிடுச்சி.வருவது அஞ்சோ பத்தோ அத வச்சி வாழ்கைய ஓட்ட முடிவு செஞ்சேன்.

 அது சரி உங்க மகன் இப்ப உங்க கூட இல்லையா?

இல்லப்பா படிச்சி ஒரு லெவலுக்கு வந்த பிறகு நல்ல வேலைக்கு போனான்.சரி இத்தோடு நம்ம கஷ்டம் ஒழிஞ்சதுன்னு நினைத்தேன்.ஒரு நாள் அவன்
அம்மா பொண்ணு வீட்டுல நம்ம பேக்கிரவுண்ட் தெரிஞ்சிடுச்சி அவங்க என்ன தனி குடித்தனம் போனா மட்டுமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க நானும் எங்க அம்மா என் பேச்ச தட்டமாட்டாங்கன்னு சொல்லிட்டேன்.
உன்ன வாரத்துக்கு ஒரு முறை வந்து பார்க்கறேன்,பணம் ஏதாவது தேவை பட்டா என் நம்பருக்கு கூப்பிடுமா என்று சொல்லி போனவன் தான் 3 வருஷமாகுது வரவே இல்ல ஏதோ மும்பை பக்கம் போனான்னு கேள்வி பட்டேன்.
அப்புறம் என்னப்பா பண்றது வயிறு இருக்குல்ல திரும்பவும் தொழில்தான் என்ன காப்பாத்துது ஓண்ணு மட்டும் சொல்றேன் கண்ணுகளா பெத்த தாய் வயிறு பத்தி எரிஞ்சா எதுவுமே தாங்காது.நான் வேணும்னா முற தவறி பெத்திருக்கலாம் ஆனா முற தவறி வளர்க்கல அப்பா நம்ம கஷ்டம் முடிஞ்சதுன்னு நினைச்சேன் ஆன மீண்டும் தொடருது.
இப்ப கூட உங்க அம்மா அப்பா உங்கள எதிர்பார்த்து கொண்டு இருக்கலாம்.பாதி வழில எறங்கி எங்கேயாவது ரூம் போட்டு நாம ஜாலியாக இருக்கலாம்.அதனால என்ன பயன் எனக்கு எனக்கு தேவயான காச சம்பாதிச்சாச்சு.பாவம் உங்க அம்மா அப்பாவுக்கு போக வேண்டிய காச கொண்டு போக எனக்கு மனசு இல்ல,இருக்கிற காச கொண்டு போயி அவங்க கிட்ட கொடுங்கப்பா ரொம்ப சந்தோஷ படுவாங்க.

சரிம்மா இந்த நூறு ரூபாயாவது வச்சிக்க

தம்பி எனக்கு பிச்சை எடுக்குற பழக்கம் இல்லப்பா.இந்த பணத்த வச்சி ஏதாவது பொருள வாங்கி உன் பெற்றோரை சந்தோஷ படுத்து.

அது வரை மோக பொருள் மட்டுமே என்று நினைத்த நானும் என் நண்பனும் அருமையான தாய் இதயம் ஒன்று எங்கள் அருகில் பேசிக்கொண்டு இருக்கிறது என்பதை வெகு நேரம் கழித்தே அறிந்துக்கொண்டோம்.